செவ்வாய், 18 மார்ச், 2014

கிரகம் எழுதுகிறேன்




எதையோ தேடுகிறது
எந்தன் மனம்.
எந்த உந்துதலோ
ஆழ்மனதின்
ஆழத்திலிருந்து
தூண்டுகிறது..விட்டால்
துள்ளுகிறது.

எதை நான்
சாதிக்க வேண்டும்.
எதை நான்
வெல்ல வேண்டும்.
எதையுமே சொல்லாமல்
எதையோ தேடச்சொல்லி
எதற்கோ உந்துகிறது
எந்தன் கிறுக்குமனம்..!

வேரோடு ஆலமரத்தை
சுண்டுவிரலால் சுமக்கமுடியுமோ?
வானவில்லோடு வானத்தை
நுனிபற்களால் பறிக்கமுடியுமோ ?

முடியும் , தேடு
என்று உந்துகிறது
என் அற்புதமனம்!

எப்படி முடியும்?
கேட்பது என் பகுத்தறிவு...!
ஏன் முடியாது ?
கேட்டது என் ஆழ்மனம்...!

”எழுதுகோல் எடு....!
விரலோடு தைத்துவிடு...!
இப்பொழுது...
ஆலமரத்தின் விதைக்குள்
ஊடுருவி ஒளிந்துக்கொள்..!
வானவில்லின் வாசலில்
எழுந்து காட்சியாகு..!
சென்ற விதையிலிருந்து
எழுந்து வந்த வானம்வரை
அனுபவித்து எழுது...!”
புதுமை பித்தமனம்
புதுசா உளறியது.

இது என்ன
மாயா ஜாலமா??
முரண்பட்டு
தலையில் அடித்துக்கொண்டது
என் பகுத்தறிவு...!

பதில் சொன்னது
என் அதிசயமனம்...!

இதுதான்
மாய உலகம்..!
இதுதான்
கற்பனை உலகம்..!
இதுதான்
சிந்தனை எழுச்சி..!
இதில் எழுதுடா
கவிதை...!
நீ தான் டா
கவிஞன்...!
உனக்கு நீதான்
ரசிகன்...!

இந்த உலகை
மறந்து எழுது..!
இந்த உலகத்தையும்
மறக்காமல் எழுது...!
..........
என் நாடி நரம்புகள்
துடிப்புடன்
புத்துணர்ச்சி பெற..
புதிய மின்னல்
மூளையில் சொருகி
நிற்கிறது..!

எழுதி கொண்டிருக்கிறேன்...!
என் கற்பனையில்
கருவாக்கி உருவாக்கி
செதுக்கிகொண்டிருக்கிறேன்.
இதுவரை யாரும்
சிந்திக்காத
இதுவரை யாருக்கும்
புலப்படாத
புதிய கிரகம் ஒன்று.
எனக்கான மாற்று கிரகம் என்று
எழுதிக்கொண்டிக்கிறேன்.



---------------------------------- இரா.சந்தோஷ் குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக