செவ்வாய், 7 ஜனவரி, 2014

இவர்களும்.......



ஆண்மையில் பூத்த பெண்மை
பெண்மையில் பூரித்த ஆண்மயில்
ஹார்மோன்கள் சதிசெய்த விதிகள்.
இவர்களும் மனித பிறவிகளே !

பூவையராக விரியாத ஆடவர்கள்.
தாமரையாக மலராத ஆதவன்கள்.
குரோமோசோம்களால் பூக்காத பூக்கள்.
இவர்களும் மனித பிறவிகளே !

சமூகத்தால் அகராதியாக்கப்பட்ட வார்த்தைகள்
குடும்பத்தால் வெறுக்கப்பட்ட உயிர்கள்
உறவுகளால் மறுக்கப்பட்ட அபூர்வங்கள்
இவர்களும் மனித பிறவிகளே..!

மனிதம் இன்னும் சமாதியாகாமல்
புனிதம் மேலும் புனிதப்பட
திருநங்கைகள் எனும் மனிதர்கள்
இவர்களை தோழமையில் பாதுகாப்போம்.

********************************************************

திருநங்கைகளே ! தோழமைகளே !!
கைதட்டியது போதும் ! போதும் !
கை உயர்த்தி கால் பதியுங்கள்
சமுதாயத்தில் நீங்களும் அங்கம்தான்.

வாழ்ந்திட பாலியியல் தொழிலில்
வீழ்ந்திட்ட விதியை மாற்றிடுங்கள்
உயர்ந்திட வீரமென்று புறப்படுங்கள்
உலகத்தில் நீங்களும் சாதிக்கணும்தான்.

பருவ வயது உணர்ச்சி குழப்பத்தில்
உணர்வு எழுச்சியில் நிலை மாறியிருக்கலாம்.
கர்வத்தோடு புத்துணர்ச்சியில் வாழ்ந்திடுங்கள்
தன்மானத்தோடு புரட்சியில் வெல்லுங்கள்.

தடைகள் உடைத்து வாருங்கள்
காத்திட இளைய சமுதாயம் காத்திருக்கிறது.
விடைகள் தானாக வராது -இங்கே
வினாக்களுக்கு காரணம் கிடையாது .

உள்ளுணர்வை அடக்கி வைத்துவிட்டு
வெளியுலகை ரசிக்க ஆயுத்தமாகுங்கள்.
உங்களின் இயலாமையை வீசிவிட்டு
நண்பர்கள் எங்களை அணுகுங்கள்.

தோழமையில் உண்மையும் ஆண்மையும்
போற்றிட உங்கள் நண்பர்கள் தயார்.
அருகாமையில் அமர்ந்து கற்பும் நட்பும்
போற்றிட உங்கள் நண்பர்கள் தயார்.


(தொடரும்........)

சேரிடம் அறிந்து சேர்




சேவல்களே..!
கூவுவதை நிறுத்துங்கள்
ரிங்டோனில் விடிகிறது
எங்கள் உலகம்.

மேகங்களே..!
பொழிவதை நிறுத்துங்கள்
பிளாஸ்டிக்கில் மூடப்படுகிறது
எங்கள் பூமி.

மாடுகளே.!
விவசாயம் செய்யாதீர்கள்.
மாத்திரைகளில் பசியாறுகிறது
எங்கள் வயிறு.

எப்படியாவது மீண்டும்
மனித குலத்தோடு
சிநேகமாக உறவாட
வேண்டுமோ ?
நண்பர் விண்ணப்பம்
அனுப்புங்கள்
முகநூலில் பரிசீலிக்கிறோம்.

காதலிக்கிறேன்



கற்பனைக்கு எட்டியவைகளை
கவி விற்பனைக்கு அனுப்புகிறேன்
ரசனை கொடுத்து வாங்குங்களேன்...

*********************************
தத்தளித்த மனதோடு
காதலிக்க புறப்பட்டேன்
மறுக்க மாட்டாள் -எனை
ஏற்க வருவாள்
என்றே சென்றேன்.

வழியில்
விண்மீன் கேட்டது
அவள் எப்படி என்று

சொன்னேன்
விண்மீனே..! அவள்
விழியில் மீன்
முகத்தில் நிலா
கூந்தலில் கார்மேகம்
இடையில் வானவில்
மொத்தத்தில் வானதேவதை.


என்னை விட பொலிவோ..?
கேட்டது நிலா

.
அவளை விட
நீ சற்று மங்கல்தான்.
என்றேன்.


கருமையிலா மோகம் ?
குறுக்கிட்டு கேட்டது மேகம்

குசும்பாய் சொன்னேன்
கருப்பின் ரசிப்பு- அது
கரும்பின் இனிப்பு
கம்பனிடம் கேட்டுப்பார்.
விடை கொடுத்து
விடைபெற்றேன்

சுற்றிவளைத்த
வானவில் கேட்டது
என்னை விட
வளைவு அதிகமோ?

நெளிந்துகொண்டே சொன்னேன்
உந்தன் வளைவுதான்.
எந்தன் கைப்பட்டால்
வளையல் சத்தம்தான்.

நேரமாயிற்றே
தொடர்ந்தேன் நடந்தேன்
விழுந்தேன்
கீழே கடந்தேன்
கண் விழித்தேன்.

அடடா கனவா இது ??

ஹைக்கூ -கணினி




செவ்வாயில் என் காதலி
தூது போனது மின்காந்த புறா
மின் அஞ்சல்.
```````````````````````````````````
தொலைந்து போனேன்
நொடிகளில் காட்டிக்கொடுத்தது
கூகுள் தேடுதளம்
```````````````````````````````````
எல்லைக்கோடுகள் இல்லை
சர்வதேசமும் நேசிக்கப்படுகிறது
முகநூல்.
```````````````````````````````````
எந்திரமாக என் குழந்தை
தொடைகள் தொட்டில்
மடிக்கணினி.
```````````````````````````````````
அம்பலமாகும் தகவல்
பிரபஞ்சத்தின் திரை
இணைய உலாவி.

http://eluthu.com/kavithai/168423.html

ஆறாம் அறிவின் அறிவுரை



விடைபெற்ற ஆண்டு
விடையென்ன அது கொடுத்தது
விலையென்ன நீ கொடுத்தாய்
சிந்திக்க மறந்துவிட்டு
சிங்காரிக்கின்றாய் புது ஆண்டை..

விடை கொடுத்து
விட்டாய் வருடத்திற்கு
விடை கொடு
என் வினாவிற்கு...

சென்ற ஆண்டு
எது கொடுத்தது ?
எதை கெடுத்தது ?
இந்த ஆண்டில்
எதை விட வேண்டும்?
எது தொடர வேண்டும் ?

சென்ற ஆண்டில்
எது இழந்தாய்?
எதற்கு இழந்தாய்?
இந்த ஆண்டில்
எங்கு எடுப்பாய்?
எதை எடுப்பாய்?


தேதியை கிழித்துவிட்டு
செய்தி என்ன கொடுத்தாய்?
மாதங்களை மாற்றிவிட்டு
மாற்றம் என்ன கண்டாய்?

அனுபவ விருதை
கொடுத்த வருடத்தை
நன்றியில்லாமல் மறந்துவிட்டு
ஆட்டம் ஆடுகின்றாய்.

ஜனவரி..1
இந்த ஒற்றை நாளா
இந்த மொத்த வருடத்தின்
இன்பத்தை கொடுக்கும்?
மெத்த படித்தவன் நீ
மொத்தமாய் மறந்துபோகிறாய்.

இன்றைய புதுசு
நாளைய பழசு
நேற்றைய அனுபவம்
நாளைய சாதனை.

வருடம் கடந்துபோனால்
நாட்காட்டி புதுப்பிக்கப்படுகிறது
நீ என்று புதுப்பிக்கப்படுவாய் ?

உன் விருப்பத்திற்கு
விடையெழுதி விட்டு
வினாவை தேடாதே !
வினாவிற்கு விடைதேடு
விடை கிடைக்கும்
இந்த புத்தாண்டிலாவது ...
புது விடை கிடைக்கும்

உற்சாக மமதையில்
கூத்து அடிக்காதே..!-
உன்னிடமிருந்து
என்னை விடுவித்து
கொள்வேன்.
ஜாக்கிரதை !!

இப்படிக்கு,
ஆறாம் அறிவு