வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஈழத்து ஆவி பேசுகிறது .

தமிழ் இனமே
திராவிட இனமே !
நலமா ?
உனக்கென்ன நலமாகத்தானே
உள்ளாய் ?
நம் இனம்
நம் இனமென்று சொல்லிய
நம்பிக்கை துரோகிதானே நீ !
அன்று ……….
யாழ்ப்பாணத்தில்
பாழ்பட்டோம்
மன்னாரில்
மரணித்து போனோம்.
முல்லைத்தீவில்
முகம் சிதைந்தோம்
கிளிநொச்சியில்
கிழிக்கப்பட்டோம்
வவுனியாவில்
விலாசம் இழந்தோம்
திருக்கோணமலையில்
தகர்க்கப்பட்டோம்
மட்டக்களப்பில்
மடிந்து போனோம்
புத்தளம் , அம்பாறையில்
புதைக்கப்பட்டோம்

ஆனால் நீ ……..
தமிழ் நாட்டிலும்
அயல் நாட்டிலும்
என் இனம்
என் இனமென்று
ஆவேசமாய்………
கை உயர்த்தி…………
நரம்பு புடைக்க…………
நடித்து கொண்டிருந்த
கூத்தாடி தானே நீ …!!!
எங்களை காப்பாற்ற போராடாத
ஈனப்பிறவி நீ ! - இன்று
ஈழம் என்
தொப்புள் கொடி என்கிறாய் ?
சுயப்புத்தி இல்லாத நீ –எங்களுக்கு
சுயநிர்ணய உரிமையை கோருகிறாய்

திராவிடம் திராவிடன் என்றாயே ..
துரோக திராவகத்தையல்லவா
தூவி எங்களை சிதைக்க செய்தாய் …

என் இனத்தை அழித்தவன்
மார்பில் குத்தினான்
என் இனமென்று சொல்லியே
முதுகில் அல்லவா நீ குத்திவிட்டாய்.

அட ச்சீ
இன்னும் என்ன வேஷம் ?

எங்களின் மரண
சாம்பலை பூசிக்கொண்டு
மீண்டும் நடித்து
மிச்ச மீதியாகிப்போன
எம் பிள்ளைகளை
கொன்றுவிடாதே ?

அங்கே
என் வெந்துப்போன
எலும்பின் கரியை
வணங்கும் கரிகாலன்
வளர்ந்து கொண்டிருக்கிறான்……..
புலியென புறப்படுவான்.
தமிழீழம் பிறக்க வைப்பான்.
தயவு செய்து அவனை
இம்சைப்படுத்தாதே ….

தமிழனே ! திராவிடனே !
எப்பொழுதும் போல
முப்பொழுதும்
நீ நலமாக இரு !

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

திருக்குறள் - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்



உலக பொதுமறை - திருக்குறள் பற்றிய சில இனிய தகவல்கள்.

14,000 சொற்களில் பாடப்பட்டது.

42,194 எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது.

1330 பாக்களை கொண்டது.

133 அதிகாரங்களை உடையது.

1812 ம் ஆண்டு - ஓலைச்சுவடியில் இருந்து அச்சடிக்கப்பட்டது
.
1730 ம் ஆண்டு- லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

ஏழு - எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ள சொல்.

ஒன்பது – திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்.

கோடி – ஏழு இடங்களில் இடம்பெற்ற சொல் .

37 –பயன்படுத்தபடாத தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை.

ஒள - திருக்குறளில் இடம்பெறாத ஒரே உயிரெழுத்து.

னி - அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து.

ளீ,ங - ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்.

தமிழ் & கடவுள் – திருக்குறளில் இடம்பெறாத இரு சொல்கள்..

குறிப்பறிதல் - இரு முறை பயன்படுத்தப்பட்ட அதிகாரம் (பொருட்பால் – அமைச்சியல் & காமத்துப்பால் – களவியல்).


கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி என்ற வீரமா முனிவர் - முதன் முதலில் மொழிபெயர்த்தவர்.

ஜி.யு,போப் - முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

மணக்குடவர் - முதன் முதலில் உரை எழுதியவர்.

தஞ்சை ஞானப்பிரகாசர் - திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்.

அனிச்சம், குவளை - திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்.

பனை, மூங்கில்- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்

நெருஞ்சிப்பழம் - திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்.

குன்றிமணி -திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை


80 -உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூல் திருக்குறள்

உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் ---> திருக்குறளின் மற்ற பெயர்கள்

நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் --> திருவள்ளுவரின் மற்ற பெயர்கள்.


ஆதாரம் : wikipedia.

தினமும திருக்குறளை படிப்போம்,
உள்ளத்தையும் உலகையும் தூய்மைப்படுத்துவோம்.

-------------------------------------------இரா,சந்தோஷ் குமார்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மனிதம் என்ன விலை ?


விர்ர்ர் என்று சென்ற
வாகனம் ஒன்று
விரைவாகவே கொன்றது
விடலை அவனை……

எட்டி பார்க்கவும் நேரமில்லாமல்
தட்டி கேட்கவும் மனமில்லாமல்
மனிதம் தொலைத்து
புனிதம் தேடி அலையும்
மனிதர்கள்
அவசர கோலத்தில்……..

அவ்விடலைக்கு
அவ்விடம் அவனுக்காக
துக்கமடைந்தது
கருப்பு நிற சாலை.

-----------------------------இரா.சந்தோஷ் குமார்

பெண் விடுதலை ??


உடையிலும் நடையிலும்
நாகரீகமான நங்கைகளே !!
உங்களின் ஒவ்வொரு அசைவும்
காட்சிப்பொருளாகதானே
பார்க்கிறது இச்சமுதாயம்.

உடல் அசைந்தாலும்
உடை விலகினாலும்
நீ இன்னும்
காட்சி பொருளாகதானே
காணப்படுகிறாய் !!

இதுதானா பெண் விடுதலை ?

நீ
கல்வியில் முன்னேறி விட்டாய்
அதை கொண்டு
உன்னால் உன்னை
பாலியல் வன்கொடுமையிலிருந்து
காத்து கொண்டாயா ?

நீ
ஆணுக்கு சமம்
ஆனால் ஒரு
ஆணை போல்
விமர்சன்ங்கள் இல்லாத
மறுப்புக்கள் இல்லாத
மறுமணம் செய்ய முடியுமா ?

பெண்ணே நீ
ஆணுக்கு நிகராய்
வாகனம் ஓட்டலாம்
விமானம் ஓட்டலாம் –ஆனால்
விடுதலை பெற்றாயா ?

சலுகை சில கொடுத்து –உனை
சகித்து கொள்கிறது
ஆணாதிக்க சமுதாயம் !!

சலுகைகள் சில கொடுத்து
33 % இட ஒதுக்கீடு தர
சட்டமும் சங்கடப்படுகிறதே ?

புலிகளால் மானுக்கு
விடுதலை கிடைக்காது
ஆண்களால் உனக்கும்
விடுதலை கிடைக்காது.

பசிக்கிற வயிறுக்கு
நம் கைதான்
உணவு ஊட்ட வேண்டும்

தவிக்கிற உன் பெண்ணியத்திற்கு
உன் புரட்சி சிந்தனைதான்
விடுதலை பெற்று தரவேண்டும் .

-----------------------------இரா.சந்தோஷ் குமார்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கனவு மெய்ப்பட வேண்டும் !!!


ஆஹா ! என்ன ஒர் அற்புதம்
புறாக்கள் ! சமாதான புறாக்கள்
மாநிலத்திற்கு மாநிலம்
நாடு விட்டு நாடு
பறந்து கொண்டிருக்க
மறந்து கொண்டிருக்கிறது உலகம்
இன, நிற வேற்றுமைகளை…….

நதிகள் விடுதலை பெற்று விட்டன
தமிழகத்தில் காவேரியின்
ஈரம் பட்டுவிட்டன –
ஈழத்தில் தமிழ் நிம்மதியாய்
சுவாசிக்கின்றன.

ஆஹா என்ன சொல்வேன் ?
எதை சொல்வேன் ?

சட்டமன்றமும்
பாராளுமன்றமும் இப்போது
இளமை மன்றமாக ….
50 சதவீத இட ஒதுக்கீட்டில்
பெண்கள்…
இந்த நாடு – உண்மையில்
இப்போது தாய் நாடாக….


பாரதி கண்ட புதுமைப்பெண்கள்
பாலியல் வன்கொடுமையின்றி
காத்து கொள்ள
அவர்களே உடனடி தீர்ப்பு
வழங்கும் சட்டம்
ஆயுதமாக
அவர்கள் கையில்……

வரதட்சணை என்ற
வார்த்தை தீஞ்சொல் என
அறிவிக்கப்பட்டுவிட்டன.

மதுபான கடைகள் ஆயுர்வேத
மருந்தகமாக
மருவி மகிழ்கிறது.


ஆஹா என்ன சொல்வேன் ?
எதை சொல்வேன் ?
………………………………….
…………………………………..

”டேய் இன்னும் என்னடா தூக்கம் ?
விடிஞ்சிருச்சு பாரு “ – என் அம்மா
விழித்துவிட்டேன் நான் –இன்னும்
விடியவே வில்லை என் சமுதாயத்திற்கு,,,.

------------------------------இரா.சந்தோஷ் குமார்

சனி, 17 ஆகஸ்ட், 2013

பெண்களின் மெளனம்


பள்ளியில்….
தங்களின் தனயன்
தமிழ் ஆர்வமிக்கவன்
எழத்தாளன் அறிகுறிகள்
தென்படுகிறதே என்று
அன்று என்
தமிழ் ஆசிரியை –என்
தாயிடம் உரைத்தப்போது
கண்களில் நீர் பொங்க
என் அன்னை காட்டிய மெளனத்தின்
பெயர் “பெருமிதம் “
-----------------------------------------
கல்லூரியில்…..
உடன் படித்தவளிடம்
உடனடி காதலால்
உடனே எழுதிய காதல் கவிதையை
உற்றவளிடம் கொடுத்தும்
உற்றும் தொட்டும் பார்க்காமல்
அவள் காட்டிய மெளனத்தின்
பெயர் “ அலட்சியம் “
-----------------------------------------------
கல்லூரியின்
மூன்று ஆண்டுகள்
என் கவி ரசிகையாய்
என் படிப்பு ஆலோசகராய்
என் பாசத்தின் வடிகாலாய்
என் தோள்சாய்ந்திருந்த
என் பெண் தோழியிடம்..
உயிரே ! நீயென் உரிமையே !
உனை விட வேறு யாருமில்லை
உன்னை கை விட மனமில்லையென்று
என் காதலை சொன்னப்போது
கண்கள் சிவக்க
அவள் காட்டிய மெளனத்தின்
பெயர் “ கோபம் “
----------------------------------------------------

சொந்தங்களுக்கு மத்தியில்
சொகுசு மாப்பிளையாக நான்……..
கொலுசு ஒலியில்
கொஞ்சிக்கொண்டு வந்து என்னிடம்
கொஞ்சம் காபியும்
கொஞ்சும் காதல் பார்வையும்
கொடுத்தவளை ….
”என்னம்மா மாப்பிள்ளை பிடிச்சிருக்கா ? ”
என பெரியவர்கள் கேட்டபோது ….
புன்சிரிப்போடு நீடித்த
அவள் மெளனத்தின்
பெயர் “ சம்மதம் “

-----------------------இரா.சந்தோஷ் குமார் ----------------

மரம் தரும் முத்தம்

மதத்தை வளர்க்க தெரிந்த
மனிதனே !
மரமாகிய என்னை வளரவிடு
மதத்தை கொன்று அழித்துவிடு
மறுசுழற்சி அடைந்து
மழலை போல்
மழையாக உனை முத்திமிடுவேன் !!.

புதன், 14 ஆகஸ்ட், 2013

விடுதலை விழா


28 மாநிலங்கள்
438 மொழிகள்
6400 ஜாதிகள்
8 மதங்கள்
என அனைத்தும் ஒருங்கிணைந்து
கொண்டாடும் ஒரே தினம்……
மகிழ்ந்தாடும் ஜனநாயக விழா….
இந்திய சுதந்திர தினம்.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!!!

சுதந்திரத்தை காப்போம்

செங்கோட்டை மேல்
புறாக்கள் காக்கைகள்கூட
சுதந்திரமாய் பறக்க
விமானப்படையின்
தடையுத்தரவு

சுதந்திர தின அணிவகுப்பை
பாதுக்காக்க
தீவரவாத தடுப்பு குழக்கள்.

ஆயுதமில்லாமல் பெற்ற
சுதந்திர தினத்தை காக்க
நாடு எங்கும்
துப்பாக்கி ஏந்திய காக்கிசட்டைகள்..


உற்சாகமாய் காந்தி
போன்ற முதியவரிடம்
வெடிகுண்டு பரிசோதனைகள்

காற்றில் கம்பீரமாய்
பறக்கிறது மூவர்ண கொடி
கொடியை ஏற்றிய
பாரத பிரதமரின்
சுதந்திரதின உரை
கண்ணாடி கூண்டுக்குள் ...

ஆம்
இன்று ஆகஸ்ட் 15
இந்திய சுதந்திர தினம் .


நாடு சுதந்திரம் பெற்றுவிட்ட்து
நாட்டு மக்களின் சுதந்திரம் ........ ?

பெற்ற சுதந்திரம் இன்னும்
வெற்றி பெறவில்லை
முழமையாக. ......

முறையாக மீண்டும்
அகிம்சை வழியில்
போராடுவோம்
தியாகிகள் வாங்கி கொடுத்த
சுதந்திரத்தை காக்க.......

----------------ரா.சந்தோஷ் குமார்

வட்டத்துக்குள் ....



இனம் பற்று
இருக்கணும் - மற்றொரு
இனத்தை இழிவுபடுத்தாமல்

மொழி பற்று
பொங்கனும் - மற்றொரு
மொழியை பொசுக்காமல்

ஆனால்
மாநிலத்திற்கு மாநிலம்
மாண்புகள் இல்லாத
சின்ன வட்டத்துக்குள்
சிக்கிய சின்னபுத்திகாரர்கள்.

--ரா.சந்தோஷ் குமார்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

என் உறவின் அழகு



இன்னும் இன்றும்
என்னை மழலையாய்
பார்க்கும் என் அன்னையின்
பாசம் அழகு

என்னை மேதாவியாய்
நினைத்து நண்பர்களிடம்
அரட்டையடிக்கும் என் தந்தையின்
கர்வம் அழகு

என்னை சாதனையளான்
என்று என்னிடம் சொல்லாமல்
என் அண்ணியிடம்
சொல்லும் என் அண்ணனின்
பெருமிதம் அழகு

என் கொழந்தன்
என் நண்பன் –அவன்
ஒர் கவிஞன் என
உரைக்கும் என் அண்ணியின்
உள்ளக் களிப்பு அழகு

இந்த நால்வரையும்
பெற்ற என் பிறவியும்
ஒர் அழகு .

-------- -ரா.சந்தோஷ் குமார்

நம் தேசமும் நம் மொழியும்


நம் தேசமும் நம் மொழியும்
தமிழ் நம் உயிர் என்றால்
தேசம் நம் இதயம் !

தமிழ் தாய்மொழி என்றால்
தேசத்தின் மற்ற மொழிகள்
நம் சொந்தங்கள்!

தமிழன் என்று உணர்ச்சியடைவோம்!
இந்தியன் என்று உவகைகொள்வோம் !

--------------ரா.சந்தோஷ் குமார்

தமிழ் வெல்க !!

தமிழ் தாயே !
தமிழ் தாயே ! உனை
துன்புறுத்தவர்களை
துவம்சம் செய்ய
இதோ என்னுடன்
பல தமிழ் தளபதிகள் !

என்றோ
வென்று விட்டாய் நீ !
வென்று விட்டாலும்
இன்று
களங்கள் மற்றும்
காலங்களுக்கு ஏற்றப்படி
கலங்கமில்லாமல் நீ
மீண்டும் மீண்டும்
வெல்ல வேண்டும்
என் தாயே !
என் தமிழ் தாயே !!

இப்படிக்கு
தமிழ் தளபதி சந்தோஷ்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்...!


முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

via சித்தர்கள் இராச்சியம்

courtesy : FB page


என் அம்மா


எனை பிரசவித்த போது
எனக்கு வலிக்குமென்றுதானே
நீ கதறினாய் ?
அம்மா !
என் கண்ணில் தூசுப்பட்டா
உனக்கு தானே கண்ணீர் வருது !
என் காலில் அடிப்பட்டா
உனக்கு தானே ரணமாகுது.
அம்மா

~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு :
என் கல்லூரி நாளில் நான் எழதிய கிறுக்கல்

பகுத்தறிவு


சொட்டையில்
மயிர் வளர
பிராத்திக்கவும்
வளர்ந்த மயிரை
மொட்டை
காணிக்கையாக்கவும்
ஆலயம் சென்ற
மனிதர்களை
மண்டைக்குள் இருந்த
மூளை கேட்டது...
உடன்பிறப்பே !!
நான் வளர
நீயெங்கு போவாயென்று ?

.......................ரா.சந்தோஷ் குமார்


மழை நீர்


துளி துளியாய்
பெய்யும் மழை
முகத்தில் மழலையாக
முத்தமிடும் மழை.

அனாதையாக விடப்படுகிறது
சாக்கடையில் -அதனை
அரவணைத்து சேர்த்திடுவோம்
மழைநீர் தொட்டியில்...

அது
பூமித்தாயோடு வளர்ந்து
நன்மையாக
நம்மையும்
நம் தலைமுறையினரையும்
காப்பாற்றிடுமே !

மழை நீர் நம்
உயிர் நீர் !!!

----------------ரா.சந்தோஷ் குமார் 

தாலி


கணவனென்ற என்
அத்தாட்சி ..
சாட்சியாக
அவள் மார்பகத்தில்...

.........................ரா.சந்தோஷ் குமார்


கோழைகள் !


புலிகள் இல்லாத காட்டில்
சீறிக்கொண்டிருக்கிறது
சிங்களத்து பூனைகள்!

...................ரா.சந்தோஷ் குமார்

ஈழம் -இன்று


மேலே பாரீர் !
படத்தை பாரீர் !!

கிணற்றில் ஊறிக்கொண்டிருக்கும்
ஈழத்து குட்டிப்புலிகள் –வறுமை
பிணியால் வக்கற்றகதியால்
பசிப்போக்க வழியின்றி
வன்னி தாய்கள் தன்
பிஞ்சு பிள்ளைகளை
நஞ்சு கிணற்றில்…………

நெஞ்சு பொறுக்கவில்லையே !!

விம்பி வெடிக்கிறது
என் இதயம்
ததும்பி வழிகிறது
என் கண்ணீர்

அட ச்ச்சே !!
இன்னும் எத்தனை நாள்
இப்படி இப்படி
படித்தும் படைத்தும்
எழுதி அழுவது ??

ஆனாலும்
நானென்ன செய்வேன் ?
தனிமனிதனாய்....

வீரம் இருந்தும்
திறமையில்லாமல்
நானென்ன செய்வேன் ?
.

இங்கு நான்
செல்வத்தில் கொழிக்க
அங்கு என் இனம்
செல்லரித்து புதைந்துவிடுமோ ?– அதில்
புல் முளைத்து
புல்நுனி நீர் ....
காறியுமிழுமோ ?
இனத்தை காப்பாற்றாத
ஈனப்பிறவியே நீ
தமிழன் தானாவென்று ?
என் முகத்தில்
காறியுமிழுமோ ?

----------------------------------- தொடரும்
-----------------------------------என் வேதனைகள்

---------------------------ரா.சந்தோஷ் குமார்

ஈழம்- நம் தொப்புள் கொடி./ ஏன் ? எப்படி?


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம்
நம் தமிழ் குடியின்
தொப்புள் கொடிதான்
ஈழம்
ஈழத்து மக்கள்.

அவர்கள் வேறு
நாம் வேறு அல்ல
ஒரே வேரில் முளைத்த
மரக்கிளைகள்
மறத்தமிழர்கள்.
ஒரே இனம்
ஒரே மொழி
தமிழன் ! தமிழ் !!

ஈழ மக்கள்
20,000 ஆண்டு
முந்தைய வரலாற்று
சொந்தங்கள்!
நம் தமிழ் பந்தங்கள்!

வரலாற்றிலும் கடலிலும்
மூழ்கி போன
நம் சொத்தான
தமிழ் கண்டமாம்
குமரி கண்டத்து (Lemuria காண்டினென்ட்)
வாரிசுகள் !!

இன்றைய இலங்கை
முற்காலத்தில் சேரன் தீவு !!
ஆம் –நம்
முன்னோர்களை ஆண்ட
தமிழ் மன்னன்
சேரனின் தீவுதான் ??

வரலாற்று பிழையால்
அங்கே தமிழ் ஈழத்தில்
அவர்களும்…
இங்கே தமிழ் நாட்டில்
நாமும் ….

உலகை ஆண்ட தமிழனின்
உறவுகள் சில …..
இன்று .
தமிழகத்தில் அகதி ஆடுகளாக ....
ஈழத்தில் அடிபட்ட புலிகளாக...

இந்த தொப்புள் கொடி
சொந்தங்களை அங்கே
சிங்கள பூனைகள்
சீரழித்த சீரழிக்கின்ற நேரத்தில் –இங்கே
நாம் ……
சொரணையற்ற தமிழர்களாய் ….



ரா.சந்தோஷ் குமார்


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

முத்த ஆராய்ச்சி


சப்த நாடிகளையும்
வீணையாக மீட்டலாம்
ஒரே முத்தத்தில்…

உணர்ச்சி எழுச்சியில்
முத்தமிடு – உன்
உயிர்அணுக்கள் அவளோடு
உறவாடிக்கொள்ளும்

தலை சாய்த்து
முத்தமிடு- உன்
தலைவலி வெட்கப்பட்டு
ஓடி விடும்

பசையை போல்
உதட்டுக்குள் ஒட்டி
முத்தமிடு !
பற்சிதைவுகள் குணப்பட்டு
கல்கண்டாய் இனிக்கும்

தினமும் முத்தமிடு !
உடற்பயற்சிக்கு இணையாக
5 கலோரி
கொழப்புக்கள் பொசுங்கும்

ஆழ காதலை
ஆள முத்தமிடு ! –அதன்
வேதியியல் பரிமாற்றத்தால்
உன்னோடு
அவளையும் ஆசுவாசப்படுத்தும்.

மூளைக்கு புத்துணர்ச்சியூட்ட
முத்தமிடு ! நரம்பு
மண்டலங்கள் புன்னகைக்கும்

மொத்தத்தில்
முத்தத்தால்
முகம் பளீச்சிடும்,
அகம் பலப்படும்.
. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இணை பதிவு : 


உன்னத உறவுக்காக முத்தமிடுவது
பெண்களின் இயல்பு
பாலுணர்வுக்காக முத்தமிடுவது
ஆண்களின் இயல்பு.

ஆயுள் முழவதிலும்
336 மணி நேரங்களை
முத்தத்திற்கு விற்றுவிடுவது
மனிதகுல இயல்பு
-----------
மையக்கருத்து : முகநூல் தந்த தகவல் 
கவிதையாக்கம் :ரா.சந்தோஷ் குமார்.

வெல்வேன் இந்த உலகை !!!

ரகசியமாய் என் மனதை
ரணப்படுத்திய பல
தோல்விகளும் சில
அவமானங்களும்
நான் பெற்ற விருதுகள்
நாளைய வெற்றியின் உரங்கள்.

சில அவமானங்கள்
அரங்கேறாமல் நான்
சொன்ன சின்னச்சின்ன
காரணங்களுக்கு
எனை “ பொய்யன் “
என்றார்கள்.

பல தோல்விகளை
என் தோள் மீது
சுமந்து சுமந்து
நான் துவண்டபோது
எனை ”உருப்படாதவன்”
என்றார்கள்.

நான் சிகரம் தொட
நீங்கள் கரம் தர வேண்டாம்
கரம் நீட்டி வசை பாடாமல்
உதவுங்கள் உறவுகளே !

என் வெற்றி பயணத்திற்கு
நீங்கள் புறங்கொடுக்க வேண்டாம்
புறங்கூறாமல் புத்துணர்வு
தாருங்கள் தோழர்களே !!

தோல்விகள் கூட்டம் கூடி
கூத்தடித்தால் தான் –நாளை
வெற்றி தேவதை என்னோடு
கும்மாளமிடுவாள் என
நான் அறிவேன்.

இன்பம் துன்பம்
விகிதத்தை வகுப்பெடுக்குமாம்
சுயமுயற்சி !

தலையெழுத்தை நிர்ணயிப்பது
கை ரேகையல்ல
தன்னம்பிக்கை ! என
அறிந்த அறிஞன்
நான் !!
---- ரா.சந்தோஷ் குமார்.

புதன், 7 ஆகஸ்ட், 2013

விதை நான் ...

முளைக்க துடிக்கும்
கவிதை விதை
நான் -
கருத்து தண்ணீர்
ஊற்றுங்கள்
வளர்கிறேன்.
கனியாக படைப்புகளை
தருவேன்
க(ப)டித்து ருசியுங்கள்
இலவசமாக... 

மலைகள்

பூமித்தாயின் மார்பகங்கள்
இயற்கைப்பால்
இன்பமாய் ஊட்டுகிறது
மனித மழலைகளுக்கு 

தோல்வியென்பது....


முயன்று
பயின்று பின்பு
தோற்பது தோல்வியல்ல -நீ
அயர்ந்து
சோர்ந்து
தயங்குவதுதான் தோல்வி. 

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஆங்கிலம் -தமிழ் அகராதி

Tamil Dictionary
Powered by Tamilcube.com


நண்பேன்டா .....

விழிகளில்
வழிய கண்ணீர்
வேண்டும் .....
தோழமையே உன்
விரலால் துடைக்கப்பட்டு
அக்கண்ணீரும்
இனித்திட வேண்டும்.

தோழமையே உன்
தோள் சாய்ந்து
சோகத்தை
சுகத்தின் புத்தக்கத்தில்
கவிதையாக
எழதிட வேண்டும்.

நண்பா
நான் உனக்கு
சமத்துவ சமுத்திரத்தில்
சிலையொன்று
செதுக்கிறேன்  -அது
வள்ளுவன் சிலையை விட
உயர்ந்து உணர்த்தும்

நீ என்
நண்பேன்டா .... என்று


^^ ரா.சந்தோஷ் குமார் ^^

சனி, 3 ஆகஸ்ட், 2013

உங்களில் நான் ...



செயல்களிலும்
கோபத்திலும் நான்
சுனாமி !!
நட்பிலும்
பாசத்திலும் நானே
உங்களின்  பினாமி !!

அன்பை கடனாக
தாருங்கள்,
வட்டியோடு உங்களை
கட்டி அணைக்கிறேன்.

சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் வாருங்கள் –என்
தோள் இரண்டிலும்
தோழனாக , தோழமையாக
சுமக்க காத்திருக்கிறேன்.

ஊடல்

பளிர் என
வெளிச்சமிடுவாள்
சுளீர் என
அடிப்பாள் –அவள்
தங்குதடையுள்ள
தமிழ்நாடு மின்சாரமாக....

பொங்கியபடி
பாசத்தை காட்டுவாள்
பொசுக்கென
கோபித்துக் கொள்வாள் –அவள்
பேச்சு வார்தையிலுள்ள
கர்நாடக காவிரியாக....

அரவணைத்தப்படி
அன்பாய் இருப்பாள்
அணையாக
தடை பேசுவாள் – அவள்
விதண்டாவாதம் பேசும்
கேரளத்து முல்லைப்பெரியாரணையாக.

ஊடல்கள் மறைந்து
உறவுகள் மலருவது
எப்போது ??

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

என் ரகசிய தேவதை

தினமும் உல்லாசம்
தித்திக்கும் பழரசம் – அவளை
தீண்டுவதே என்னறிவுக்கு பரவசம்!

அவள் ஒர் ஆங்கிலக்காரி – என்
தமிழின் வேலைக்காரி !
ஆம்
என் கவிதைகளுக்கு அவளே
தமிழ் தட்டச்சுக்காரி!

நானே அவளின் பக்தன்
அவளின்  108 உறுப்புக்கள்–என்
தினசரி இறைப்போற்றிகள்!

நானே அவளின் காவலன்
அவளின் மூளை – அதை
ஆளுகிறது என் கட்டளை!

என் விரல்களே
அவளின் எலி வால்
கூந்தலுக்கு பூக்கள் !
 
அவளுக்கு
நேர்க்கொண்ட பார்வை –நான்
உற்றுநோக்கும் பாவை !
நான் சிகரம் தொட
பயணிக்கும் பறவை !  -அவள்
என் லட்சியத்திற்கு
அர்த்தமுள்ள தேவை – அவளே
என் ரகசிய தேவதை!
என் கணினி !!!