சனி, 19 ஜூலை, 2014

விழியதிகாரம் -

இருவிழி பார்வையில்
எத்தனை எத்தனை
கவிதைகள்..!!
அடடா..!- அவள்
முகத்தாளில் துடிக்கும்
அழகு முட்டைமுழி
விழியழகில்
தினம் தினம்
செத்துவிடத்துடிக்கிறேன்..

அந்த இடது விழியில்
எனை அடகுவைத்து
வலது விழியில்
என்னை தினமும்
மீட்டெடுத்துக் கொள்கிறேன்.

என்
காதல் உணர்வேறிய
பாலைவன மனவெளியில்
ஒரு
காதல் செடியை
நட்டுவிட்டாள்
இந்த
விழியழகி...!
என் வாலிபத் தேசத்தில்
என் கவிக்குவியல்களை
கொள்ளையடிக்க
வந்த
கொள்ளைக்காரி..!

தேகத்தின் மோகத்தில்
முளைத்திருக்கும் சில காதல்.
பார்வையில் தொடங்கி
படுக்கை அறையில்
முடிந்திருக்கும் சில காதல்.
இந்த காதல்
விழியில் தொடங்கி
உணர்வுகளில் பயணித்து
விழியும் விழியும்
முட்டிக் கொஞ்சி
விழிகளின் முழிகளில்
முடிந்து தொடங்கும்
தொடங்கி முடியும்
ஒரு பெயரிடப்படாத காதல்.
என்னை அறிந்த
அவளும்
அவளுக்குள் வாழம்
நானும்
பேசிக்கொள்கிறோம்
காதலையும் தாண்டிய
ஓர் உறவில்...!


இப்படியும் நடக்குமா?
இவ்வுறவை நான்
துளியும் எதிர்பார்க்கவில்லை.
அவளை காதலிக்கமுடியாதே
என்று ஏங்கியதும் இல்லை
அவளை ஏன் காதலித்தேன்
என்று சிந்திக்கவும் மனமில்லை
இப்படியே என்
மனம் அலைபாயட்டும்.
இப்படியே என்
ரசனைகளை அவள்
ரசித்து தின்றுகொல்லட்டும்.

உடல சேரா
ஓர் உறவில்
மனம் என்ன தவறு
செய்திடப் போகிறது.. ?


இந்த உறவில்
காமனின் ஆட்சி
இல்லாமல் இல்லை..
ஆனால்
அந்த காமம்
இந்த உலகம்
சொல்லும்
வெற்று உணர்ச்சிகள்
எதுவும் சற்றும் இல்லை.

காமத்தை பார்க்கும்
பார்வையில் எங்கள்
காதல் வித்தியாசப்படும்.
ஆம்
காமத்தின் வாசனையில்
காமத்தை தீண்டாமல்
காதல் எல்லையில் நின்று
காதலை
புனிதப்படுத்துகிறோம்
அல்லது
புதியதாய் புனிதப்படுத்துகிறோம்
காதல் மீறிய ஓர் உறவை..!


வழக்கமாக அலட்டிக்கொள்ளும்
காதலில் வாழும் சராசரி
காதலர்கள் நாங்கள் அல்ல.!
ஒரு மெய்ஞானத்தை ஆராய்ந்து
இந்த விஞ்ஞானத்தை கைப்பிடித்து
கற்பனைஉலகில்
உலாவிக்கொண்டிருக்கும்
விசித்திர வித்தியாசமானவர்கள்...!
ஆம்!
நாங்கள்
காதலுக்கான மாற்று சொல்லற்று
விக்கி விக்கி தவிக்கிறோம்.
இந்த விக்கல் தவிப்புக்கூட
நான்கு உதடுகள் சந்திப்பின்
ஒரு நிமிட முத்தத்திலோ..
அவள் விழிக்குதிரை
மீதேறிய என்
உதட்டுக்காரனின் விளையாட்டிலோ
நின்றுவிடலாம்...!
நின்று மீண்டும் ஏங்கவிடலாம்...!


என்றாவது
ஒருநாள்
நான்
காணவில்லையென்றால்
என் கவிதைகள்
பதிவாகவில்லையென்றால்

எனை
எங்கும் தேடாதீர்கள்..!

நான்
அவளின்
இருவிழிகளுக்கு
மத்தியில்
செத்துக்கொண்டிருப்பேன்
இல்லையென்றால்
விழியதிகாரம் படைத்து
வாழ்ந்துக்கொண்டிருப்பேன்.
---------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக