செவ்வாய், 24 செப்டம்பர், 2013

பிரம்மன் அவன் பிரம்மனே !!


பிரம்மன் அந்த பிரம்மன்
ஆண்பால் என் முன்
பெண்பால் அவளை
படைத்து விட்டானே?

வில்லின் புருவங்கொண்டு
நாணமேற்றி
இமையால் இழுத்து
கயல் விழியால்
எய்தினாள் அம்பை
அந்த ரம்பை

அதுயென் விழிமுழிகளை
தாக்கி மூளையினை
அடக்கி எனை
மூடனாக்கியது –காதல்
பித்தம் ஏறியது
ரத்தம் சூடேறியது –கவி
சந்தம் அரங்கேறியது -இதோயென்
கவி நாட்டியம்….
--------------------------------------

வானவில்லில் நிறமெடுத்து
அந்தி மஞ்சளில் தாளித்து
நிலவில் பொலிவேற்றி
அவள் முகத்தை
படைத்தானோ ? அந்த
பிரம்மன் அவன் கம்பன் !

கார்மேகத்தின் கருமை எடுத்து
கார்குழல் கூந்தலையும்
மின்னலின் மின்சாரம் எடுத்து
காந்த கண்களையும்
படைத்திருப்பானோ ? அந்த
பிரம்மன் அவன் ரசிகன் !

மலர்ந்த சங்குப்பூவை
பறித்து கழுத்தையும்
விரிந்த தாமரைப்பூவை
கவிழ்த்து மார்பையும்
வளைந்த அவரைப்பூவின்
வடிவமெடுத்து இடையையும்
படைத்தானோ ?– அந்த
பிரம்மன் அவன் காமன்!

சந்தேகமென்னவோ? அவனுக்கு -இரண்டு
கேள்விக்குறியை சிலையாக்கி
இடைக்கு கீழ் சொருகி
அன்னத்தின் பாதத்தை உருவாக்கி
அவளின் பின்னே வந்து
ஏன் தான் மயங்கினானோ? –அந்த
பிரம்மன் அவன் பிரம்மனே !


---------------------------- இரா.சந்தோஷ் குமார்

சனி, 14 செப்டம்பர், 2013

பூவையவள்


அடும்பு பூவே !
அதிரல் மலரே !
உனை தொட நீ
எனை படருவாயா ?

அவரைப்பூ ! மூக்கே !
நுகர்ந்தால் நீ
மணக்கும் சந்தனப்பூ வோ
நுகர்ந்தப்பின் வாடிவிடும்
அனிச்சை பூ
அல்லவே? நீ

ஆவல் நோயில்
நானிருக்க நீ
ஆவாரை பூ ப்போல
குணப்படுத்திடுவாயா ?
ஆத்தி பூ வாக –எனை
சுத்தி வருவாயா ?

இரவு தனிமையில்
இலவம் பூவாய் நானிருக்க
இருள்நாறி பூவாய்
கவர்ந்திட வருவாயா ?
ஈங்கை பூவே !
வேங்கை எனை
வருட வருவாயா ?

பூவே வருவாயா ? –உனை
பூஜிக்க காத்திருக்கிறேன் .
வருவாயா ?

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பிரசவத்தில் பிரசவிக்கும் தாய் !!! - by முனைவர் சுதா


கம்பனின் கற்பனைக்கெட்டாத
கவியொன்று பூத்தது என்னுள்
கவியே நீ
கண்ணனா !!! கண்ணகியா !!!

ஈருயிர் சுமக்க வைத்து
தாய்மை பட்டம் சூட்டி
பெண்மையை பூர்த்தியாக்கிய
பொதிகை தமிழே !!!

வீரகுடி வேந்தனின் வித்தே
உன்னை உயிரிலே செதுக்கி
உதிரத்தை உணவாக்கி
பத்து திங்கள் காத்தேன் ...!!!

குலம் காக்கும் குருத்தே
குங்கும பூ பாலாம்
இசைகேட்டு நீ துயிலிட
வளைகாப்பு விழாவாம் ...!!!

எட்டி உதைத்து விளையாடி
கருவறையிலே வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
ஏங்கினேன் உன்முகம் காண ...!!!

மஞ்சள் திரையிட்டு ஆதவன்
மதி வருகைக்கா மறைந்திருக்க
முகில்கள் முத்தமிடும் மாலையிலே
பெற்றேன் பிரசவ வலியை ...!!!

அக்கணமே மனதில் மழை
இன்ப துளிகள் கண்களில்
சிப்பியின் முத்தாக முகம்காட்டி நீ
அம்மா என்றழைக்க வருவதையென்னி ..!!!

ரணம் தேகத்தை தீயாக்கி
உயிர் நாடியை இறுக்கி
ஆன்மாவை ரணமாக்கியது
வலி வன்முறையில் மரணித்தேன் ..!!!

அந்நொடியில் இரத்த திலகமிட்டு
நவ ரத்தினமாய் உதித்தாய்
கீதத்தோடு உன்பிஞ்சு விரல்கள்
எனைத்தீண்டியதும் நானும் பிரசிவித்து ..!!!

அள்ளி அணைத்து முத்தமிட்டேன்
அங்கமெல்லாம் என் உயிர் தங்கமே .
அங்கமானாய் அம்மாவின் வாழ்வில் ...!!!

இப்படிக்கு
அன்னை

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் வளர்ச்சிக்கு பின்னால் ....


அறிவாளியாக
பகுத்தறிவாளனாக
சிந்தனையாளனாக
கவிஞனாக
தொழில்முனைவோனாக -பல
மொழி அறிந்தவனாக
பல்த்துறை வல்லவனாக
பல பாதையில்
வளர்ந்து வருபவன் –இந்த
தற்போதைய ”நான்”

அப்போதைய என்
ஆசிரியர்கள் கொடுத்த
அறிவு முதலீடுகள்
கல்வி சொத்துக்களின்
பரிணாம வளர்ச்சிதான்
சந்தோஷ் குமார் என்கிற நான்.

அகரம் கற்று தந்து- என்னை
சிகரமாய் வளர வைத்த -என்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களே !!
என் நன்றியை
உங்கள் காலடியில்
முத்தமிட்டு சமர்ப்பிக்கிறேன்
ஆசிர்வதியுங்கள் !!
என்னையும்…
என்னை போன்ற பலரையும்…

---------------------------------------இரா. சந்தோஷ் குமார்

வளர்ப்புத்தாய்கள்


முட்டியிட வைத்தாய்
முதுகில் தட்டிக்கொடுத்தாய்
பிரம்பால் அடித்தாய்
பிரம்மிக்க வைத்தாய்
அஞ்ச வைத்தாய்
அசுத்தத்தை துடைத்தாய்
அழ வைத்தாய்
அறிவு கொடுத்தாய்
உச்சந்தலையை வீங்க வைத்தாய்
உச்சத்தை அடைய வைத்தாய்

இவ்வாறே எனை
நீ படைத்தாய்.
கல்விப்பால் அன்பால்
ஊட்டிய ”தாய்” நீ

அ என்றால் அம்மா
ஆ என்றால் ஆசிரியர்
அ , ஆ ……. கற்று தந்த
ஆசிரியர்களே !! எனை
ஆசிர்வதியுங்கள்.

செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்

-------------------------------------இரா. சந்தோஷ் குமார்

நம்மை இயக்கும் இயற்பியல்


விதி 1 :
ஒன்றின் மீது விசையில்லாதவரை -அது
ஒய்வு நிலையிலேயே இருக்கும்
உந்தன் மீது சுமையில்லாதவரை – நீ
மனிதன் அல்ல, மண்ணின் பாரம்.

விதி : 2
பொருளின் மீதான விசையினால் - அதன்
வேகம் நேர் விகித திசையிலிருக்கும்
இலட்சியத்தில் நேர்மையடைந்தால்– உந்தன்
வெற்றி மேம்பட்ட திசையிலிருக்கும்

விதி : 3
ஒவ்வொரு வினைக்கும் சமமான
எதிர்வினை உண்டு- மனிதா !
ஒவ்வொரு செயலின் விளைவுக்கும்
பின் விளைவு உண்டு


அஃறிணையான பொருளை ஆராய்ந்த
அறிஞர் நியூட்டனும்
உயர்திணையான மனிதனை ஆராய்ந்த
சுவாமி விவேகானந்தரும்
கண்டறிந்த திணை விதிகள்.
--------------------------இரா.சந்தோஷ் குமார்

கவிதையென்னும் என் குழந்தை



சிந்தனை காதலால்
கற்பனை காமத்தால்
மன்மத மனம் கொண்டு
நான் விளையாட………..

மொழியெனும் மனைவி
காம நுகர்ச்சியால் என்னோடு
உறவாடி உருவாக்கினாள்
”கரு “ எனும் மையக்கருத்தை.

இதோ அடுத்த
பத்தாவது நிமிடத்தில்
உயிர் மெய்
எழுத்துகளுடன் பிறக்கப்போகிறது
என் கவிக் குழந்தை !!

இதற்கு முன்
சில குழந்தைகள்
கருவிலே கொலையாகி விட்டது
சில குழந்தைகள்
பிறந்ததும் ஊமையாகி விட்டது.
சில குழந்தைகள்
குறைபிரசவத்தால் பிழையாகி விட்டது
ஆனாலும் நான் உருவாக்கிய
அனைத்து குழந்தைகளும் -என்
அன்பு குழந்தைகள்.
நான் முத்தமிட்ட
அறிவுச் செல்வங்கள்



------------------------------------இரா. சந்தோஷ் குமார்